எப்பொழுது தொடங்கியது
இந்த முடிவில்லா ஓட்டம்
கல்லூரிப் படிப்பில் சேர்ந்த பிறகா
வேலைக்கு சேர்ந்த பிறகா
சிறிது நேரம் அமர்ந்து
யோசித்த வேளையில்
அந்த நொடிகள்
ஆர்ப்பரித்தன கண்களில்
முதல் மதிப்பெண் எடு
என்ற அம்மாவின் அறிவுரை
பனிரெண்டாம் வகுப்பில்
நன்மதிப்பை பெரு
உன் வாழ்க்கை
சிறந்து விளங்கும் என்றனர்
பொறியியல் படிப்பை
தேர்ந்தெடு
உன் எதிர்காலம்
பிரகாசமானதாகிவிடும் என்றனர்
நல்ல வேலையில்
சேர்ந்து விடு
உன் வாழ்க்கை
கனிந்து விடும் என்றனர்
மேலாளர் பதவியை
அடைந்து விடு
உன் பொருளாதாரம்
சிறந்து விளங்கும் என்றனர்
இருபதுகள் கடந்தன
இவை அனைத்தும்
செய்து முடிக்க
மறு பேச்சு பேசாமல்
இளைப்பாற நேரம் இல்லாமல்
சமூக எதிர்ப்பார்ப்புகளை
நிவர்த்தி செய்ய
முப்பதுகளில் காலடி
எடுத்து வைத்தேன்
இன்னும் வேகமாய் ஒடு
இன்னும் சிறப்பை தேடு
என்ற அறைகூவல்கள்
மடியில் என் குட்டி தேவதை
என்னை மீட்க அவதரித்தாள்
வேகத்தை குறைத்தேன்
நிமிடங்களை சேகரிக்க தொடங்கினேன்
என்னை தேட துவங்கினேன்
என் தனி தன்மையை அறிந்தேன்
சமூகம் மதிக்கும் வெற்றி இலக்கை
நோக்கி ஓடாமல்
என் இதயம் துடிக்கும் பாதை
தேடி மெல்ல நகர்கின்றேன்